Wednesday, July 5, 2017

மந்திரிமனை – யாழ்ப்பாண அரசின் ஓர் நினைவுச்சின்னம்


இம் மந்திரிமனை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நல்லூர் சட்டசாதர் கோவிலின் தென்னெல்லையில் நல்லூர் இராசதானியின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கம்பீரமான முகப்புத்தோற்றத்துடன் காணப்படுகின்றது. இம்மந்திரிமனை போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியடைவதற் முன்னர் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடமாக இருந்ததென்பது பொதுவான கருத்தாகும்.

இம் மந்திரிமனை 13ம் ஆண்டுக்கும் 17ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டதென்று கருதப்படுகின்றது. இவ்விடம் தமிழ் இராசதானி இருந்த இடம் என்பதால் அக்கால அரசகட்டிடங்கள் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

manthirimanai

ஆயினும் தற்போதைய இம் மந்திரி மனையின் அமைப்பும், கலைமரபும் யாழ்ப்பாண அரசு காலத்திற்குரியவை எனக் கூறமுடியாது. சில சுதேசகலை மரபுகளும், தமிழரின் தொழில்நுட்பமும் கலந்து காணப்பட்டாலும் கட்டிடத்தின் தோற்றமும், அதன் கலைமரபும் யாழ்ப்பாண அரசிற்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பியருக்கும் உரிமையாகக் காணப்படுகின்றன.
இரு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் முன்முகப்பில் வாசல் பகுதியை ஒட்டியவாறு அதன் அரண்டு பக்கங்களிலும் இரு கல்லிருக்கைகள் காணப்படுகின்றன. இங்கு வந்துபோவோர் அமர்ந்திருப்பதற்காக அமைக்கப்பட்டவையாக இவை இருக்கலாம். இதிலிருந்து இக்கட்டிடம் ஒரு நிர்வாக மையமாக அல்லது சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த  ஒருவரின் இருப்பிடமாக இருந்ததென்பது தெரிகிறது.

இவ்விருக்கைகளுக்கு முன்னால் உயர்ந்த வேலைப்பாட்டுடன் கூடிய வீட்டுக் கதவு காணப்படுகிறது. அதனைக்கடந்த பெரியதொரு மண்டபம் காணப்படுகிறது. அம் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு அறைகளும் தெற்கே ஒரு அறையும் காணப்படுகிறது. ஏறத்தாழ இதே அமைப்பே மேல்மாடியிலும் காணப்படுகின்றது. மேல் மாடிக்குச் செல்வதற்காகத் தெற்குப் பக்க அறையை ஒட்டியதாக மரத்தாலான படிகள் காணப்படுகின்றன. காற்றோட்ட வசதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் உயர்ந்த கூரை தற்கால கூரை அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான அம்சமாகக் காணப்படுகிறது.

manthiri manai


மேலும் இம்மனையின் பின்புறத்தில் நில அறை ஒன்றும் அதற்கு மேல் மூடுசாந்தினால் அமைக்கப்பட்ட மண்டபமும் இருந்ததாக தெரிகிறது. தற்போது இவை இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் சுரங்க வாசல் ஒன்று பிற்காலத்தில் அடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீட்டிற்குள்ளே இருந்த நிலவறையும் அதற்குள் இறங்கிச் செல்ல இருந்த படிக்கட்டுகளும் பிற்காலத்தில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கட்டிடத்திற்கும் 'ஜமுனா' ஏரிக்கும் இடையே சுரங்கப்பாதை இருந்ததாக நம்பப்படுகிறது. இக்கட்டடத்தின் சிறப்பான அம்சங்களாக மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளால் காணப்படுகின்றன. மரச்சிற்பத்திலான சிற்ப வேலைப்பாடுகளால் காணப்படுகின்றன. மரச்சிற்பத்திலான பொதிகையின் மேல் இரண்டு யானைத்தந்தங்களைப் பொருத்தியது போன்ற வளைவிலான இரு மரச்சட்டங்கள் கூரை முகட்டினைத் தாங்கி நிற்பது பார்ப்போரைக் கவர்வதாகவுள்ளது. இதன் கலைமரபு பிற்பட்ட ஒல்லாந்தர் கால கலைப் பணியை நினைவுபடுத்தினாலும் கட்டடத்தின் உள்ளே காணப்படும் மரத்தினால் செதுக்கப்பட்ட தூண்கள், சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய பொதிகைகள் யாழ்ப்பாண அரசு காலத்தைச் சார்ந்தவையாக அல்லது அக்கால கலைமரபைப் பின்பற்றி பிற்காலத்தில் வடிவமைப்பட்டதாக காணப்படுகின்றன எனலாம்.

இம் மந்திரிமனையை ஐரோப்பியர் கால நினைவுச் சின்னமாக எடுத்துக்கொண்டாலும் அதற்குள் யாழ்ப்பாண அரசுகால வரலாறும் மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. கி.பி.1619 இல் யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்ட போர்த்துக்கேயரும், பின்னர் ஆட்சி செய்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசு கால ஆலயங்கள் கட்டடங்களை அழித்து அப்பொருட்களைப் பயன்படுத்தியே தமது ஆலயங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், நிர்வாக மையங்கள் என்பவற்றை அமைத்ததாக அவர்களது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதை யாழ்ப்பாணக் கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், இந்து விக்கிரகங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவை இவை பெரும் பாலும் கடற்கரை சார்ந்த இடங்களிலேயே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் மந்திரிமனை அமைந்த நல்லூர்ப்பிரதேசம் கடற்கரை சார்ந்த இடமல்ல. அப்படியிருந்தும் ஐரோப்பியர் இருந்தமைக்குக் காரணம் ஏதோ இருக்க வேண்டும்.

யாழ்ப்பாண அரசு தொடர்பாகத்தோன்றிய பிற்கால இலக்கியங்கள் நல்லூர் இராசதானி காலத்தில் இருந்த ஆலயங்கள், கோட்டைகள், துறைமுகங்கள், அரசமாளிகைகள், இருப்பிடங்கள் பற்றிப் பலவாறு கூறுகின்றனர். போர்த்துக்கேய ஆசிரியரான கெய்ரோஸ் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த 500 ஆலயங்களை இடித்தழித்ததாகக் குறிப்பிடுகிறார். அக்கட்டிடப் பொருட்களைப் பயன்னடுத்தியே தமது கட்டிடங்களை அமைத்ததாகத் தெரிகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் மண், மரம், கல் என்பவற்றைக் கலந்து கட்டிய கட்டிடங்களே காலப்போக்கில் ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் கற்கள் கொண்டு மீளக்கட்டப்பட்டன.
இவ்வரலாற்றுப் பின்னணியை நோக்கும் போது யாழ்ப்பாண அரசு காலத்தில் அவரட்களின் நிர்வாக மையமாக இருந்த ஒரே இடமாக மந்திரிமனை இருந்திருக்கவேண்டும். அதைக்கைப்பற்றிய போர்த்துக்கேயரும் பின் ஆதிக்கம் செலுத்திய ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் காலமாற்றத்திற்கு ஏற்ப சமகாலக் கலைமரபைப் பயன்படுத்தி மந்திரிமனையை மீளமைத்திருக்க வேண்டும். ஆயினும் இதைக் கட்டுவித்தவர்கள் ஐரோப்பியராக இருந்தாலும் கட்டியவர்கள் யாழ்ப்பாணத்து மக்களாக இருக்க வேண்டும்.

 அதனால் தான் கட்டிடத்தில் காணப்படும் கலைவேலைப்பாடுகள் பல தமிழரின் பாரம்பரிய கலை மரபுகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. ஆகவே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு தற்போதைய மந்திரிமனையின் தோற்றம் ஐரோப்பியரின் நினைவுச் சின்னமாகத் தெரியலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் யாழ்ப்பாண அரசின் வரலாறும் மறைந்திருப்பதைக் காணலாம்.
இம் மந்திரிமனையின் வரலாற்றுச் சிறப்புக்கருதி தற்போது அது அரச நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது. இதன் வரலாற்றுப் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் உணர்ந்த யாழ்ப்பாண மாவட்ட சபை, மாநகர சபை, மாவட்ட செயலகம் என்பன 1984ஆம், ஆண்டு 1990ம் ஆண்டு, 1994ம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ் நினைவுச் சின்னத்தை அதன் பழமை மாறாத வகையில் பாதுகாப்பதற்குப் பல முயற்சிகளை எடுத்து வந்தன. ஆயினும் தற்போது அதன் தோற்றமும் பழமையும் அழிவடைந்து போகும் நிலையிலேயே காணப்படுகின்றன.



உசாத்துணை நூல்கள்
1. நடராசா.க. 2011 வரலாற்று உலா கமலம் பதிப்பகம் பக். 49-51.

2. நகுலன்.க. 2014 யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்கள் கமலக்கண்ணன் பிறின்ரேர்ஸ் பக்.28-30.

No comments:

Post a Comment

  தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயி...