Wednesday, July 5, 2017

பருத்தித்துறையிலுள்ள தெருமூடி மடமும் அதன் பிரதான இயல்புகளும்.


பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன் கோவிலுக்கு அணித்தாக அமைந்துள்ள இத்தெருமூடி மடமானது பல்வேறு காலகட்டங்களில் திருத்தப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வந்துள்ளமையைக் காண்கின்றோம். அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டு கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியானது 150 வருகாலப் பழமை மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.


 திராவிடக்கலைப் பணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்கதாகும். வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம். 'பொழிந்த வெண்வைரக் கற்சதுரங்கள்' பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பாவப்பட்டு அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட முறையைப்பார்க்கும் போது அவற்றின் சிறப்புக் கூறுகள் அதன் நீணட காலப்பாவனை ஆகியன வெளிப்படுகின்றன.
இருபக்க திண்ணைகளிலும் கல் பாவப்பட்ட தளத்திலிருந்து நான்கு பக்கச்சதுரப்பட்டை அமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத் தாங்கும் பகுதியில் தூண்கபோதத்துடன் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இருபக்கங்களிலும் எல்லாமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அற்றுள் 6 தூண்களில் தமிழ் வடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவ வளர்ச்சியை அச்சாசனங்களில் காணமுடிகின்றது. இச்சாசனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை அவற்றைப்படியெடுத்ததன் (நுளவயஅpயபந) பின்னரே வெளிப்படுத்த முடியும்.

therumudi madam

தூண்களின் அமைப்பு தனித்துவமானது. ஒற்றைக் கற்றூண்களாக காணப்படும் இவை நடுவில் எண்பக்கப்பட்டையுடனான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உட்பட முழுத் தோற்றமுமே பல்லவர் கலை மரபினைத்தழுவி உருவாக்கப்பட்டுள்ள முறையைக் காண்கின்றோம். இத்தெரு மூடி மடத்தினது இரு புறங்களிலும் உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்  திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. இவ்விரு திண்ணைபோன்ற தளத்தின் அகல நீளமானவை தூரப்பார்வைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் நடுமண்டபத்திற்கு இருமருங்கிலும் காணப்படும் நடைமண்டபமாக (ஐளடநள) தோற்றமளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்திரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய  ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெரு மூடி மடத்தூடான வாகனப் போக்குவரத்து நடைமுறைகளுக்கு அந்த உயர்ந்த கூரை எவ்விதத்திலேனும் தடையாகவோ, இடைஞ்சலாகவோ அமையாது   ஒரு பொலிவான தோற்றத்தினை தூரப்பார்வைக்கு வழங்குவதனை காண்கின்றோம்.
இத் தெருமூடிமடத்தின் இருபக்க மண்டபகங்களினதும் மேற்கூரை தட்டையானதாக (குடயவந) அமைக்கப்பட்டுள்ளது. நீள்சதுர கூரையமைப்பின் தட்டையான பரப்பினை உருவாக்குவதற்கு நீளமான வெண்வைரக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இரு கூரைத்தட்டுக்களின் கூரை முகப்புக்கள் இரு முனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவ்வற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச் சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடக்கலை ரீதியாக நோக்கும் போது யாழ்ப்பாணத்திற்கேயுரிய திருப்பணிக்கல் - கட்டிடக்கலை மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த கையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத் தெருமூடி மடத்தினைக் கொள்ள வைக்கின்றது.
இன்றைய நிலையில் இத்தெரு மூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைதாங்கிக்கல், ஆவுரஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர்த்தொட்டி (கற்தொட்டி) ஆகியன முற்றாகச் செயல் இழந்த நிலையிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக்குடா hரவலாகக் காணப்படும்  சுமைதாங்கிக்கற்களும், ஆவுரஞ்சிக்கற்களும் 'றோட்டுக்கரைப்பிள்ளையாரை' போன்று 'சும்மா' வீற்றிருக்கின்ற வகையைக் காண்கின்றோம்.

ரயர் - ரியூப் ஒட்டுகின்ற புத்திசாலிகளான சில கடைக்காரர்கள் இவ்வாறு சும்மா கிடக்கும் கற்தொட்டிகளை நகர்த்திச்சென்று தமது தொழிலகங்களில் நீர்த்தாங்கியாக உபயோகிப்பதனையும் காண்கின்றோம். பித்தளைக்குத்து விளக்குகள் வெளிநாடுகளிலுள்ள எம்மவர் மத்தியில் யுளுர் வுசுயுலு ஆகப்பயன்படுத்தப்படுவது போன்று யாழ்ப்பாணத்திலும் கலாச்சாரப் பிறழ்வுகள் மேலோங்கி வருகின்றன.

therumudi madam data

இன்றைய நிலையில் இத்தெருமூடி மடத்தினை இணைத்துள்ள ஒரேயொரு பயன்பாட்டு வெளிப்பாடு ஆடு – மாடுகளின் மற்றும் கட்டாக்காலி நாய்களின் இராத்தங்கும் ஓர் ஆரோக்கியமான மையமாக மட்டுமே காணப்படுவதாகும். தமிழரது பண்பாட்டின் கால ஓட்டத்துடனான பண்பாட்டு விரிசல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் இச்சின்னங்களை பராமரித்து கட்டிக்காத்து வைத்திருக்க வேண்டிய அடுத்த தேவை என்ன என்பது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு எம்மால் விடையளிக்க முடியாதுள்ளது. இந்துப்பண்பாட்டு மரபில் குறிப்பாக யாழ்ப்பாணத்து சுதேசிய கிராமிய வழமைகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்ட மிகப்பாரிய விரிசல்களாலும் மற்றும் அன்னியப் பண்பாட்டுத் தாக்கங்களினாலும் பொருளாதாரத்தில் யாழ்ப்பாணத்து உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்களினாலும் எம்மவர் மத்தியில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையாமை போன்ற உளவியற் தாக்கங்கள் ஊடே உருவான மாற்றங்களினாலும் எமது பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்கள் உடையணியும் மரபுகள் மற்றும் இறப்பு பிறப்புத் தொடர்பான வழமைகள் சடங்குகள் மரபுகள் யாவும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தை கைவிட்டு மறைந்து சென்றமையின் பின்னணியில் தெருமூடி மடங்கள் ஆற்றிய சேவை இன்று எமக்கு தேவையற்றனவாக இன்றைய யாழ்ப்பாணத்து பண்பாட்டிற்கு அன்னியமானவையாக அமைந்து விட்டதைக் காண்கின்றோம்.





உசாத்துணை நூல்கள்

  1. நகுலன்.க. 2013 வடமராட்சியின் மரபுரிமைச்சின்னங்கள் கமலம் பதிப்பகம் பக்.34-36.
  2. கிருஸ்ணராசா.செ. 2015 தொல்லியிலும் வடமராட்சியின் தொன்மையும் பிறை நிலா வெளியீடு பக்.114-117.











No comments:

Post a Comment

  தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயி...