தமிழர் வாழ்வியலை உள்ளடக்கிய கற்பித்தல் முறை
தமிழர் இல்லாத நாடு இல்லை ஆனால் தமிழர்க்கு என்று ஒரு நாடில்லை என்று நோக்கும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு அதாவது கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாழோடு தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று சொல்லும் அளவிற்கு குமரிக் கண்டத்தில் தமக்கென ஓர் மொழி, ஓர் இனம், மதம், கலை, கலாச்சாரம், பண்பாடுகள் ஒருங்கே இணையப் பெற்ற ஓர் நாகரிகம் கொண்ட நம் தமிழர் பண்பாடானது இன்றைய உலகில் அனைத்து நாட்டவர்களாலும் பின்பற்றப்பட்டு வருவதனை நாம் நம் மனக்கண் முன்னே கொண்டு வர முடியும் என்றால் அது மிகையாகாது.
இத்தனைக்கும் காரணம் தமிழர் வாழ்வியலோடு கூடிய அனுபவக்கல்வியும் அவர்களது மண் வாசனையுமே அனைத்து இன,மத மொழியினரையும் தன்பால் ஈர்த்துள்ளது. அவ் விதமே மொழி, மதம், தொழில், உணவு முறை, சடங்குகள், சம்பிரதாயங்கள், கலைகள், வீரம் போன்றனவற்றில் தமிழர்களது வியர்வைகள் வேரூன்றி நிற்கின்றது என்றால் மிகையாகாது. இத்தகைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை பண்டு தொட்டு பரம்பரையாக பின்பற்றப்படும் தமிழர்களது வாழ்வியலை தற்கால மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய பெரும் கடமை கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களையே சாரும். காரணம் தற்காலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சி, உலகமயமாக்கல், தொழிலுக்கான போட்டி போன்ற காரணங்களால் அயல் நாட்டவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைகளால் தமிழர் பண்பாடுகள் வேற்றுப் பண்பாடுகளோடு கலப்படைந்து காணாமற் செல்கின்றது. இத்தகைய நிலைமை மாற்றம் பெற மாணவர்கள் மத்தியில் தமிழர்களது வாழ்வியலின் பெருமையையும் சிறப்புக்களையும் எடுத்துரைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
“சாவிற் தமிழ் படித்துச் சாக வேண்டும் - எந்தன்சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்”
என்ற தமிழ் மொழியின் பெருமையையும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முதல் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைகளையும் நம் சந்ததியினர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போன்று கற்பித்தல் முறையில் முதன்மையானதாக நோக்க வேண்டும் மாணவர்கள் மத்தியில் உறவு முறைகளையும் அதன் பெருமைகளையும் எடுத்துரைக்க வேண்டும். பண்டைய காலத்தில் நிலாச் சோறூட்டி தாலாட்டுப்பாடி தாய் தன் மகனை அல்லது மகளை வளர்த்த வரலாற்றை தற்போதைய நாகரிகத்தில் தம் அருகில் இருக்கும் உறவுகளுடன் face Book, Whats aps சாதனங்களில் உறவுகள் பேணப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. காலத்தின் மாற்றம் ஊர் ஓடும் போது ஒத்து ஓட வேண்டும் என்றாலும் அதன் இடையில் சிறு நேரம் உறவுகளுடன் நேரடியாக உறவாட வேண்டும் என்பதனை கற்பிக்க வேண்டும்.
அதே போன்று தமிழர் பண்பாட்டில் அடிப்படையான அம்சம் உணவுமுறை. மனித வாழ்வின் தேட்டத்திற்கு உணவே அடிப்படையாக அமைகின்றது. அத்தனை உணவுகள், இன்று ஆரோக்கியம் அற்ற நிலையில் இயந்திரமாக இயங்கும் மனிதன் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டான். அவ்விதமே மேலை நாட்டு உணவுகளை பீட்~h, பர்க்கர், வேகர் என்ற உணவுகட்கு நாக்கும் அடிமையாகி மாத்திரையும் கையுமாக அலைய வைத்து விட்டது. இதன் நிலமை சற்று மாற வேண்டும் எனில் மாணவர்கள் மத்தியில் தமிழர்களது புராதனமான உணவுப்பழக்க வழக்கத்தையும் அதன் சிறப்பினையும், பயனையும் கற்பிக்க வேண்டும்.
“திணையும் குரக்கன் வரகிரு சாமை
- சிறு கிழங் கும்மரவள்ளியு மல்லாமற்
- பனையிற் பனங்கா யொடியல் பனாட்டும்
- பதநீரு மேயுண்டார் பாருமடி……………”
- “சுன்னாகச் சந்தையிலே ……………
- உன்னானைச் சேதியக்கை …………
- துடை மொத்தம் ஒரு கிழங்கு ………”
போன்ற உணவுகளை தமிழ் மக்கள் தங்களது வாழ்வியலில் ஜீவனோபாயமாகக் கொண்டமையாலே பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வினை மேற்கொண்டார்கள் என்பதனை தத்துவரூபமாக மாணவர்களது மனங்களில் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் குறுகிய காலத்தில் பணம் ஈட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்ற பேர் அவா இன்றைய சமூகத்தில் வேரூன்றி உள்ளமையால் மனித உணர்வுகட்கு மதிப்பளிக்கப்படாத ஓர் இக்கட்டான நிலைமையும் அற வழியற்ற பொருள் தேடல்களும் அதிகரித்த இக் காலத்தில் மாணவர்கள் மத்தியில் புராதன காலத்து தமிழர்களது வாழ்வியலில் பொருள் ஈட்டம் என்பது எவ்வாறு இருந்தது என்பதனைக் கற்றுக் கொடுக்கத் தவறக் கூடாது. இதனையே திருவள்ளுவர்
“ ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை ……”
இரு வரிகளில் மிகவும் ஆழமாக தனது தாய் பசியுடன் இருந்தாலும் அப் பசியைப் போக்க மற்றவர்கள் பழிக்கும் செயலை செய்யக் கூடாது என்ற சிந்தனையை முன்வைத்துள்ளார். இதற்கேற்ப வாழ்வியல் முறையே தமிழர் வாழ்வியல் முறை என்பதனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே வேளை தவறுகள் செய்யின் தண்டனை உண்டு என்பதற்கு அடிப்படையாக மனுநீதி கண்ட சோழன் கன்று இழந்த தாய்ப்பசுவின் நீதிக்காக தன் மகனைக் கொன்ற உயரிய சிந்தனைகளையும் மாணவர் மத்தியில்க் கற்பிக்க வேண்டும்.
பிள்ளைகள் வேற்று மொழிப் பண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் போது பெருமைப்படும் பெற்றோர்கள் கருணையின் அடிப்படையில் அல்ல கட்டாயம் தமிழர் வாழ்வியலைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அது அவர்களது கடமை. வெறும் மதிப்பெண்களை நோக்கிய கற்றலும், கற்பித்தல் முறையும் என் பிள்ளை அவர் பிள்ளையை விட அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் வறட்டுக் கௌரவம் கொண்ட கற்பித்தல் முறைமை நீங்க வேண்டும். எனவே மாணவர்கட்கு சதந்திரமானதும் சுயாதீனமானதுமான வாழ்வியல் அனுபவக் கல்வியை வழங்க வேண்டும். அதி புத்திசாலி அறிவியல் துறையில் மிளிர்கின்றான். புத்திசாலி தொழில் நுட்பத் துறையில் மிளிர்கின்றான். ஆனால் வாழ்க்கை அனுபவத்தைப் படித்தவன் புத்திசாலிக்கும், அதி புத்திசாலிக்கும் தொழிலைத் தருகின்றான். இதுவே இன்றைய சமூகம். எத்தனை யுகங்கள் மாறினும் எம் இனம் என்றும் கோலோச்சும் என்பதற்கு அத்திவாரமாக இன்றும் எம் தமிழர் வாழ்வியல்கள் உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களாலும் பின்பற்றப்படுகின்றது என்பது தார்மீகம்……………
மன்மதராசா தசிதரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்